மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, மதுரை ஆவின் நிர்வாகத்தில் முறைகேடாக பணி நியமன ஆணை பெற்றதாக கூறப்படும் 30 பணியாளர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, மதுரை ஆவின் தலைவராக முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ்-ன் தம்பி ராஜா இருந்து வந்தார். இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பின்னர் மதுரை ஆவின் இரண்டாக பிரிக்கப்பட்டதால், ஓபிஎஸ் ராஜா  தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில், கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மேலாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆவின்  புதிய நிர்வாக இயக்குனர் சுப்பையன் தலைமையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் ஆய்வு நடைபெற்றது. அப்போது பலருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டது தெரிய வந்தது.

இத்தகைய விசாரணையின் தொடர்ச்சியாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் நியமனம் செய்யப்பட்ட நபர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோரை, அவர்களின் பணிநியமன ஆணைகள், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் தன் முன்னிலையில் ஆஜராகுமாறு பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் சம்மன் அனுப்பி உள்ளார்.

இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ் தற்போது பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக இருந்து வருகறார். இவர் இவர் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்தார். முக்கியமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குட் புக்கில் இருந்தார். இவர் அமைச்சர்களின் பணத்தை பதுக்கி வைத்து பாதுகாப்பதாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், பிரகாஷ் தற்போது திமுக ஆட்சியிலும் முக்கிய பதவியில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.  இது ஆளும் திமுகவில் மட்டுமல்லாமல் ஐ.ஏ.எஸ் வட்டாரங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.