செவில், ஸ்பெயின்

ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் ஜைர் பொல்சனாரோவுடன் பயணம் செய்த விமானப்படை அதிகாரியிடம் 39 கிலோ போதைப்பொருள் பிடிபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                                       பிரேசில் அதிபர்

ஜி 20 என அழைக்கப்படும் 20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் இன்று நடைபெறுகிறது.  இந்த கூட்டமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் கலந்துக் கொள்ள பிரேசில் நாட்டு அதிபர் ஜைல் பொல்சனாரோ சென்ற போது அவருடன் சென்ற அதிகாரிகளில் சில்வா ராட்ரிஜியஸ் என்பவரும் உள்ளார்.   அவர் ப்ரேசில் நாட்டின் விமானப்படை அதிகாரி ஆவார்.   அதிபர் ஒரு விமானத்திலும் சில அதிகாரிகள் மற்றொரு விமானத்திலும் ஜப்பானுக்கு சென்றுள்ளனர்.

இடையில் அதிகாரிகள் சென்ற விமான ஸ்பெயின் நாட்டில் உள்ள செவில் நகரில் நிறுத்தப்பட்டது.   அப்போது பாதுகாப்பு சோதனை நடந்த போது சில்வா சுமார் 39 கிலோ எடையுள்ள கோகைன் என்னும் போதைப் பொருளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.   இதை ஒட்டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி பிரேசில் அரசு அளித்துள்ள அறிக்கையில், “ஒரு விமானப்படை அதிகாரி இந்த  மாதம் 25 ஆம் தேதி அன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள செவில் விமான நிலையத்தில் போதைப் பொருள் எடுத்துச் சென்ற போது பிடிபட்டுள்ளார்.  இது குறித்து ராணுவ காவல்துறை விசாரணை நடத்த உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த அதிபர் ஜைர் போல்சோனாவோ மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இந்த விவகாரத்தில் ஸ்பானிஷ் அரசுடன் தமது நாட்டு பாதுகாப்புத் துறை ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.   அத்துடன் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.