தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம் தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பிராகுயி/ பராஹவி (Brahui) என்ற மொழி மட்டும் இந்தியாவிற்கு வெளியே பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதிகளில் பேசப்படுகிறது.

பிராகுயி மொழி பேசப்படும் பகுதி பரந்த அளவில் திராவிட மொழி பேசப்பட்டு வந்த ஒரு பெரும் நிலப்பரப்பின் எஞ்சிய பகுதியாகத் தோன்றுகிறது. தற்போது இப்பகுதி இந்தோ ஆரிய மொழி பேசப்படும் கடல் போன்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் நடுவில் தீவு போன்று உள்ளது.  ஆனால் இது பண்டைக் காலத்தில், இன்று ஈரான் என்று அறியப்படும் நிலப்பரப்பில் தொல் – திராவிட வாழிடங்களுடன் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம்.

சிந்துவிற்கு மேற்கே உள்ள பலுசிஸ்தானில் பிராகுயி மொழி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. குரூக், மால்டோ போன்ற மொழிகள் பெரும்பாலும் வடஇந்தியாவில் பேசப்படுகின்றன.

திராவிட மொழி என்றால் என்ன ?

கி.பி. 1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலைக் கால்டுவெல் வெளியிட்டார்.  திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என்று கால்டுவெல் அழைக்கப்படுகிறார்.

தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளை மேலைநாட்டார் மலபார் மொழிகள் என்றும், தமுலிக் என்றும் முதலில் குறிப்பிட்டனர். தமிழ் மொழியின் பெயராலேயே இவ்வின மொழிகளைக் குறிப்பிடலாம். ஆனால், தமிழ் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறிக்கும் சொல். பல்வேறு மொழிகளைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கப் பிறிதொரு பெயரை அமைத்தல் சிறப்புடையது என்று பரிசீலித்து, திராவிடம் என்ற சொல்லைத் தாம் தேர்ந்தெடுத்ததாகக் கால்டுவெல் கூறுகிறார்.

ஆந்திர – திராவிட பாஷா என்ற பெயரில் தென்னிந்திய மொழியினத்தைக் குமாரிலபட்டர் குறிப்பிட்டுள்ளார். இவர் வடமொழி அறிஞர்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

•             திராவிடர் என்று தென்னிந்திய மக்கள் மனு சுமிருதியில் சொல்லப்பட்டுள்ளனர் என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

இரவீந்திரநாத தாகூர் எழுதிய தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் பரந்த பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. தென்னிந்திய மொழி இனத்தையும் மக்களையும் சுட்டுவதற்குத் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

டாக்டர் ஸ்டென்கெனா (Sten Konow) திராவிட மொழிகளைத் தமிழ்த் தொகுதி (Tamil Group) என்றும், தெலுங்குத் தொகுதி (Telegu Group) என்றும் இரண்டாக வகைப் படுத்துவார். மொழிநூல் அறிஞர்கள் திராவிட மொழிகளை அவை பேசப்படும் இடத்தின் அடிப்படையிலும், அவைகளுக்கிடையே காணப்படும் அடிப்படைப் பண்புகள் மற்றும் பொதுமைப் பண்புகளின் அடிப்படையிலும் வகை செய்வார்கள். நிலப்பரப்பின் அடிப்படையில்

•             தென் திராவிட மொழிகள்

•             நடுத் திராவிட மொழிகள்

•             வடக்குத் திராவிட மொழிகள்

என்று மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.

பிராகுயி மொழியும் மூன்று கிளைமொழிகளும்:

பிராகுயி, திராவிட மொழிக் குடும்பத்தில் வட திராவிடப் பிரிவைச் சேர்ந்த ஒரு மொழியாகும். எனினும், பலூச்சி போன்ற ஈரானிய மொழிகளால் பெரிதும் தாக்கம் அடைந்துள்ளது.

பிராகுவியில் முக்கியமான மூன்று கிளைமொழிகள் உள்ளன. இவை சரவான், ஜலாவன், சாகி என்பவையாகும். இவற்றுள் சரவான், மஸ்துங், காலத், போலான், குவெத்தா ஆகிய இடங்களிலும், ஜலாவன், குஸ்டார், ஸாரி, வாத், முலா, ஜாஹு ஆகிய பகுதிகளிலும், சாகி, காரான், பேஸ்மா என்னும் இடங்களிலும் பேசப்படுகின்றன.

வழக்கொழிந்த பிராகுயி :

பொதுவாகப் பிராகுயி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்ததாகவும், இடையில் ஏற்பட்ட ஆரியக் குடியேற்றம் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கித் தள்ளப்பட்டு, தற்போது மிச்ச சொச்சமாய் இருந்து வருகின்றது. சுதந்திரத்திற்குப் இன், இந்தியாவில், ஹிந்தி முன்னிருத்தப்பட்டு வருவதால், பல்வேறு மொழிகள் இவ்வாறு வழக்கொழிந்து வருவதை நாம் கண்டுவருகின்றோம். எனவே இந்த வாத்த்தை ஒதுக்கிவிட முடியாது.

எனவே, மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பிராகுயி இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது. ஆனால் வேறுசில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பிராகுயி இன மக்கள், 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டில் பலூசிஸ்தானுக்கு புலம் பெயர்ந்தவர்களாவர்.

தற்போதைய வாழ்நிலை, முந்தைய வரலாற்றை அழித்துவிடுமா ?

தற்போது இம்மக்கள் முன்னேறிய சமூகமாய் இல்லாமல், கிட்டத்தட்ட நாடோடியாய் இருப்பதைப் பார்த்து,ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நகர நாகரிகத்திற்குச் சொந்தமான சிந்து சமவெளி மக்களின் வழித்தோன்றல்கள் இப்படிப்பட்ட அடிமட்டமான நிலையில் இருப்பார்களா? இவர்களைப் போய் நீங்கள் எப்படித் திராவிட நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று சொல்லலாம்? என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. இரண்டாவதாகப் பிராகுயி மொழி கி.பி. ஆயிரத்தில் மத்திய இந்தியாவிலிருந்து அந்தப் பகுதிக்குப் போனதென்று இந்தச் சந்தேகங்களின் அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள்.

ஒருக்காலத்தில் பெரும் செல்வந்தர்களாய் இருந்து தற்போது ஏழ்மையில் வாழும் பல எடுத்துக்காட்டுகள் பலவுண்டு. சோழ பரம்பரையின் வழித்தோன்றல்கள், எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள கொத்தடிமைகளாய் மாறிப்போன ஆவணங்கள் உள்ளன. எனவே இன்றைய வாழ்நிலையைப் கொண்டு வரலாற்றைப் புறந்தள்ளிவிட முடியாது. வரலாற்று

(கல்வெட்டு) ஆவணம்:

திராவிட மொழி எலாமைட்டுடன் தொடர்புடையது என்று அண்மையில் ஒரு கருத்து நிலவுகிறது. எலாமைட்டுகள் கி.மு.5000-இல் ஒரு பெரிய அரசினைத் தென் ஈரானில் தோற்றுவித்தனர். அவர்கள் சுமேரிய எழுத்தினை ஒத்த ஒருவகை எழுத்தினைப் பயன்படுத்தினர். அதன் காலத்தினை கி.மு.நாலாயிரத்தாண்டின் பிற்பகுதியாகக் கொள்ளலாம். எனவே இவ்வெழுத்தினை எலாமைட் என்று கொள்ளலாம். கி.மு.3000 – 4000 ஆண்டுகளில் தெற்கு ஈரானில் இந்தோ ஆரியர்கள் இருந்தார்கள் என நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஏனென்றால் அங்குத் திறம் வாய்ந்த எலாமைட் அரசு இருந்தது.

கி.மு.மூவாயிரத்தாண்டின் எலாமைட் கல் வெட்டுகளில் உள்ள மொழியினைத் திராவிட மொழிகளோடு தொடர்புபடுத்தலாம். மக் அல் பின் என்னும் மொழியியலாளர் எலாமைட்டும், திராவிட மொழிகளும் ஒரே குடும்பத்தினைச் சார்ந்தவை என்னும் கருத்தினைக் கொண்டிருக் கிறார். மேலும், தொல் எலாமைட் – திராவிட மொழி என்னும் ஒரு மொழி இருந்திருக்கும் என்ற கருத்தினையும் அவர் முன்வைக்கிறார். இவரின் கருத்துப்படி பலுசிஸ்தானத்தில் உள்ள பிராகுயி என்னும் மொழி மேற்சொன்ன மொழியிலிருந்து உருவானது.

ஆரியப் பண்பாட்டுக்கு முந்தைய திராவிட பண்பாடு- ஒரு மறுக்கமுடியாத உண்மை:

மக் ஆல்பின் கருத்துப்படி, தொல் – எலா மைட் திராவிடப் பண்பாடு கி.மு.4000 வாக்கில் சிதைந்துபோனது. இதன் சரியான காலம் எது வாயிருப்பினும் வரலாற்றாசிரியர்கள் மெல்ல மெல்ல எலாமைட் மொழிக்கும் திராவிட மொழிக்கும், பிராகுயி மொழியையும் சேர்த்து இடையேயான நெருக்கமான உறவை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். இவையனைத்தும் காட்டுவது என்னவெனில் ஆரியருக்கு முந்திய மக்கள் கூட்டம் பரந்த நிலப்பரப்பான தென் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகப் பலுசிஸ்தான் வரையிலும் பரவியிருந்தது என்ப தனையே. இப்பகுதியில் இந்தோ – ஈரானிய, இந்தோ – ஆரிய மொழிகளைப் பேசிய மக்கள் கி.மு.2000க்குப் பிறகு தங்கினர்.

மக்கள் ஓரிடத்தை விட்டு வேறிடம் செல்ல அவசியம் நேரும்போது தங்கள் ஊர்ப் பெயர்களைத் தம்முடன் எடுத்துச்சென்று, புகுந்த இடத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டுவது மனித இயல்பு. இந்த இயல்பை உன்னிப்பாகக் கவனித்து, உலகமெங்கும் காலம்காலமாக ஊர்ப்பெயர்கள் ஊர் விட்டு ஊர் செல்வதை ஆழமாக ஆராய்ந்தவர் பாலகிருஷ்ணன். அவற்றில், சிந்து சமவெளியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஊர்ப்பெயர்களை மட்டும் முத்துமுத்தாக எடுத்துக் கோத்துத் தருகிறார். கொற்கை, வஞ்சி, தொண்டி என்று சங்க இலக்கியம் சொல்லும் முக்கியமான ஊர்ப் பெயர்களைப் பாகிஸ்தானில் தான் கண்டறிந்திருப்பதை தெரிவிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் (“சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் “ நூல் ஆசிரியர்)

வரலாற்றை மறைக்கும் அரசு:

ஆரியருக்கு முந்தைய பூர்வ குடிகள் திராவிடர்கள் என்பதை ஏற்க மறுக்கும் போக்கு இந்திய அரசிடம் தொடர்ந்து இருந்து வருகின்றது. தமிழர்கள் ஆரியர்களைவிட பூர்வக் குடிகள் என்பதற்கு பல்வேறு ஆவணங்கள் கிடைத்தாலும், அவற்றை வரலாற்றில் இணைக்கும் பணியில் இந்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிந்து மொழி திராவிட மொழியே என்ற கருதுகோளை ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்ப்போலா ஆகியோர் முன்வைக்கின்றனர்.

உதாரணத்திற்கு, காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின்போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூடத் தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் பூமிக்கடியில் புதைந்து இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாகத் தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்:

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூடப் புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது.”

கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன.

கீழடி தான் மதுரையா?

சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது.

“கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 சென்ட் வரைக்கும்தான் அகழ்வு செய்திருக்கிறார்கள். முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்து, இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த 110 ஏக்கரில் பல இடங்கள் தனியார் வசம் இருப்பதால் அரசு தலையிட்டு விரைவில் அந்த நிலங்களைக் கைப்பற்ற வண்டும். அப்போதுதான் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்படும் என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் சாகித்திய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளீ நாகரிகம் எப்படி அழிந்தது ? ஆதிதமிழர்/ திராவிட நாகரிகம் எங்கே தோன்றியது ?

ஆகிய இரு புதிர்களுக்கான விடை தான் “பிராகுயி”.?

விடைகாண விரும்பாத இந்திய அரசின் மெத்தனத்தை புரிந்துக் கொள்ள முடியும், ஆனால், தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு சார்ந்து இயங்கும் தமிழக அரசு, கீழடி ஆராய்ச்சிக்குரிய முக்கியத்துவம் அளித்துத் தமிழின் பெருமையினை நிலை நாட்ட வேண்டும். இதற்கும் தமிழ்க இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் புரட்சியில் ஈடுபட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது.

பிராகுயி மொழியை  ‘அருகிவரும்’ மொழியென  யுனெசுக்கோ அடையாளப்படுத்தியுள்ளது. இம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை  குறுகி வருகிறது. பாகிஸ்தான் அரசு உருது மொழியை முன்னிலைப் படுத்தி வருகின்றது, அதனல் பிராந்திய மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன.  பிராகுயி, பல நூற்றாண்டுகள் உயிர் தப்பியதில் எந்த சிறிய ஆச்சர்யமும் இல்லை. ஆனால், திராவிட மொழியான பிராகுயியை நாம் இறக்க அனுமதிக்க கூடாது.

தமிழகத்தில் தமிழ் பலகலைகழகம் இயங்குவது போல், பாகிஸ்தான் குவெட்டாவில் உள்ள பலுச்சிஸ்தான் பல்கலைகழகத்தில், பிராகுயி மொழிக்கென ஒரு தனி துறை இயங்கி வருகின்றது. இங்குப் பிராகுயி மொழி வாரியம் அமைக்கப் பட்டு, பிராகுயி மொழியினை பாதுகாக்கவும், வளர்க்கவும், எழுத்துக்களைச் சீர்திருத்தவும், கற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால், போதிய நிதி-உதவியின்றி தவித்து வருகின்றது.

தமிழக அரசு, உலகத்தமிழ் மாநாடு நடத்தும்போது, பிராகுயி மொழி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் உதவிசெய்ய வேண்டும் என்பதே பத்திரிக்கை.காமின் வேண்டுகோள்.

நன்றி: உண்மை-ஆன்லைன், விக்கிபீடியா, கீற்று, விகடன், மற்றும்“சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்”நூல்.