கோவை: அதிமுகவின் தலைமை பதவிக்கு, தற்போதுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இருவரும் கட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என அதிமக  முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி சண்டை சந்தி சிரிக்கிறது. அதிகார மோதல் குறித்து வெளியாகும் தகவல்களால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் கட்சி தலைவர்கள்மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில், சசிகலாவும் அதிமுகவில் தன் பங்குக்கு தனது ஆதரவாளர்களைக் கொண்டு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் ஓரிருநாளில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளிவரும் அதிர்ச்சிகரமான செய்திகளால், அதிமுக மீண்டும் உடையும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் வேதனை அளிக்கிறது. எதோ விபத்தில் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பொறுப்புக்கு வந்துவிட்டனர். அந்த விபத்தில் வந்தவர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் எல்லாரும் ஒதுங்கி இருக்கிறோம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கட்சி கடுமையான சரிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில், கட்சியின் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையிடுவது சரியல்ல, கோஷ்டி பூசல் சரியல்ல.

அதனால், அதிமுகவில் இருந்து எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்?  என கேள்வி எழுப்பியவர், தங்களது ஆதரவாளர்கள்  50 பேர் சேர்ந்து, இவர்களே பதவியை ஏற்படுத்தினர் என குற்றசாட்டினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். கட்சியை நடத்த அதிமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் பொதுச்செயலாளராக வரட்டும் அல்லது ஒற்றை தலைமை ஏற்று வரட்டும் என கடுமையாக விமர்சித்தவர், தனது இந்த கருத்து,  இருவருக்கும் சங்கடமாக இருக்கும். ஆனால், அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். அதிமுக தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இருவரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலால் அதிமுகவை அழிக்க திட்டமிட்டு உள்ளார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும், அதிமுக இப்பொழுது ஜாதி கட்சியாக மாறி வருகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?, அதிமுக தலைவர்கள் மீது  குற்றசாட்டு சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு கூறினார்.

ஆறுகுட்டியின் ஆவேசமான அதிரடி பேட்டி அதிமுக தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.