டெல்லி:

ஜூன் 1ந்தேதி முதல் 200 பயணிகள் ரயில் சேவைகளை அறிவித்துள்ள மத்திய அரசு, விரைவில் மேலும் சேவை அதிகரிக்கப்படும், விரைவில் ரயில்நிலையங்களில் முன்பதிவு தொடங்கும் என்று தெரிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்சேவை, தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது.  மேலும், ஜூன் 1ந்தேதி முதல் 200 ஏசி இல்லாத பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

இதையடுத்து இன்று காலை முன்பதிவு தொடங்கியது.  இணையதளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் பலரும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்த மத்திய  ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்,  IRCTC மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் , 2 மணி நேரத்தில் 1,49,025 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
“இணைய வசதி சென்றுசேராத கிராமங்களிலுள்ள மக்களுக்கு ஏதுவாக நாளை முதல் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.7 லட்சம் சேவை மையங்களிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவுள்ளது.
அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.

கொரோனா பாதிப்பு இல்லாத ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம்.

ரயில் சேவைகளை அதிகரிப்பது குறித்து வரும் நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.

ரயில்வே நிலையங்களிலுள்ள கடைகளைத் திறக்கவும் அனுமதியளித்துள்ளோம். ஆனால் அந்தக் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களை இயக்க சில மாநிலங்கள் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு திரும்ப விரும்பும் சுமார் 40 லட்சம் பேர் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் இதுவரை 27 சிறப்பு ரயில்கள் மட்டுமே மாநிலத்திற்குள் நுழைந்துள்ளன:

உத்தரப் பிரதேச அரசும், குஜராத் அரசும் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.