விமர்சகர்: மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன்
13331089_10209727620376832_5154276518379742100_n

ரளமான நடைக்கு பெயர் போனவர் சரவணன். இதை முன்பே தனது ‘ஐந்து முதலைகளின் கதை‘, ‘ரோலக்ஸ் வாட்ச்‘ ஆகிய இரு நாவல்களின் வழியே நிரூபித்திருக்கிறார். பத்திரிகையாளராக பணிபுரிந்த அனுபவம் அப்சர்வேஷனுக்கு துணை புரிந்திருக்கிறது. எனவே கண் முன் விரியும் அளவுக்கு காட்சிகளை பதிவு செய்யவும் அவருக்கு தெரிந்திருக்கிறது.
இந்த கல்யாண குணங்கள் அனைத்தும் ‘வெண்ணிற ஆடை‘யிலும் உண்டு.
ஆனால் –
சமகால முக்கிய படைப்பாக இந்த நூலை மாற்றியிருப்பவது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் களம்தான்.
1990க்கு பிறகு தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மக்களின் உடல் அங்கமாகவே மாறிவிட்டன. ஒருவகையில் இன்றைய தமிழக சிந்தனைகளை கட்டியமைப்பது காட்சி ஊடகங்கள்தான் என்றும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஊடகம் குறித்து இதுவரை தமிழ் இலக்கிய மரபில் எந்த நூலும் வந்ததில்லை.
அந்தக் குறையை ‘வெண்ணிற ஆடை‘ போக்கியிருக்கிறது.
அறிவுத்தளத்தில் இன்று விவாதத்துக்குரிய நிகழ்ச்சியாக மாறியிருக்கும் ‘சொல்வதெல்லாம் உண்மை‘ நிகழ்ச்சியின் ஆரம்பக்கால இயக்குநர் சரவணன்தான்.
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எபிசோடுகளை டைரக்ட் செய்தவர் அவர்தான். ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…‘ என்ற புகழ்பெற்ற சொற்றொடர் அவர் இயக்கிய எபிசோடில்தான் இடம்பெற்றது.
அந்த அனுபவத்தைதான் ‘வெண்ணிற ஆடை‘ நூலாக எழுதியிருக்கிறார்.
இது புனைவா அல்லது அபுனைவா என்ற விவாதத்துக்குள் நாம் நுழைய வேண்டாம். அது அவசியமும் இல்லை. ஏனெனில் புனைவுக்கான கூறுகளுடன் திறமையாக ஓர் அபுனைவை உருவாக்கி இருக்கிறார்.
சேனலில் டெலிகாஸ்ட் ஆன அந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் இருக்கும் விவரங்களை சரியாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
நூலை படிக்கும்போது என்னை கவர்ந்தது –
எதை எதை அவர் சொல்லவில்லை என்பதல்ல.
எதை எதை சொல்லியிருக்கிறார் என்பதுதான்!
அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் புழங்கவே பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்குள் என்ன செய்ய முடியும் என்பதுதான் ஒவ்வொரு ஊடகனின் முன்பும் இருக்கும் சவால்.
அந்த வகையில் தனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியை நடத்தும்போது –
தான், எதிர்கொண்ட சவால்கள், தன்னை புரட்டிப்போட்ட மனிதர்களின் குணங்கள், கையறுநிலையில் தன்னை நிறுத்திய தருணங்கள், வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பிய நொடிகள்…
ஆகியவற்றை எல்லாம் பெரும்பாலும் பூசி மொழுகாமல் சொல்லியிருக்கிறார். சிலவற்றை பூடகமாக உணர்த்தியிருக்கிறார்.
பெரும்பாலும் சமூகத்தின் இருட்டுப் பக்கங்கள்தான். ஒருவகையில் சரவணனின் ஏரியாவும் அதுதான்.
கடன் வாங்கி விட்டு சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் திருப்பிக் கொடுத்துவிடும் ஒழுங்கான வாழ்க்கைச் சூழலில் வாழும் கதாபாத்திரங்களை ஒருபோதும் அவர் பதிவு செய்வதில்லை.
கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஓடி மறையும் அல்லது வேறு நடவடிக்கைகளில் இறங்கும் மாந்தர்களே அவரது புனைவின் கேரக்டர்கள்.
‘வெண்ணிற ஆடை‘ அதன் எக்ஸ்டென்ஷன். சமூக மதிப்பீடுகளை கலைத்துப் போடும் மனிதர்களை குறித்து உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறார். அதன் வழியே படிப்பவர்களின் ‘நேர்மையை‘ கேள்வி கேட்கிறார்.
பார்வையாளர்களாக மட்டுமே ‘சொல்வதெல்லாம் உண்மை‘யை பார்த்து விவாதித்து வந்த நம்மிடம் –
அந்த நிகழ்ச்சி எப்படி தயாராகிறது / தயாரிக்கப்பட்டது என்ற மறுபக்கத்தை காண்பித்திருக்கிறார்.
அதன் மூலம் அடுத்தடுத்து துறை சார்ந்த / TRP ரேட்டிங் பெற்ற நிகழ்ச்சிகள் சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவர பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
எளிமையான நடையும், இலகுவான வாக்கிய அமைப்பும் இந்நூலின் ப்ளஸ்.
சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த புத்தகம் அட்டகாசமான ரெஃபரன்ஸ்.
பல layers கொண்ட இந்த நூல் –
ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு விதமான புரிதலை தருகிறது.
‘வெண்ணிற ஆடை‘ தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்வது இந்த இடத்தில்தான்.
‘வெண்ணிற ஆடை‘
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ. 110.