சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சென்னையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தீவுத்திடலில் வர்த்தக பொருட்காட்சியும் நடைபெறும்.

அதன்படி, 45-வது புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6 ஆம் தேதி நந்தனத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல வர்த்தக கண்காட்சியும் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உள்பட தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. மெரினா உள்பட கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக நிறுவனங்கள், மால்கள், திருமணம் மற்றும் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளிலும் 50 சதவிகிதம் பேர் மட்டுமே கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, சென்னையில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.