சென்னை: சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பதற்றம்  அடைந்து, தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து, பள்ளிகளில் மோப்ப நாயுடன்  போலீஸ் சோதனை நடத்தி வருகிறது.

சென்னையின் பிரபலமான கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. திருமழிசையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிகளில் திரண்டனர். இதையடுத்து  பள்ளி மாணாக்கர்கள் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

மொத்தம்  சென்னையில் 17 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துஉள்ளது. இதனால், பெற்றோர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.  இதைத்தொடர்ந்து,  வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  மேலும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.