சென்னை:  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்ளும் அண்ணாமலையின் சென்னை யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதை எதித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக அறிவித்து உள்ளது.

அண்ணாமலை யாத்திரை சமாதிக்கு செல்லும் யாத்திரை அல்ல; மக்கள் பிரச்சினை குறித்த யாத்திரை, அதனால்,  காவல்துறை தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில்  வரும் 11-ம் தேதி யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பல விஐபிக்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில், இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் விண்ணப்பித்த நிலையில், அந்த யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

முன்னதாக,   சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கோரி, பாஜக மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு  அளித்தனர்.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய  கரு.நாகராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். வரும் 11-ம் தேதி (ஞாயிறு)சென்னை வாலாஜா சாலையில் அவரது யாத்திரை நடக்க இருக்கிறது. எனவே வாலாஜா சாலையில் யாத்திரை செல்ல அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த சாலையில் எல்லாகட்சியினரும் ஊர்வலம் நடத்துகின்றனர். எனவே அண்ணாமலை பங்கேற்கும் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளோம் என்றார்.

மேலும்,  சென்னையில்,  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும்பொதுக்கூட்டமும் சென்னையில் நடக்க இருக்கிறது. அந்தக் கூட்டத்தை மடிப்பாக்கம், தியாகராயநகர், தங்கசாலை, கீழ்ப்பாக்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். போலீஸாரின் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அண்ணாமலையின் சென்னை யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட பாஜக நிர்வாகிகள்  காவல்ஆணையரை சந்திக்க சென்றனர். ஆனால், அவர்களை பலமணி நேரம் காக்க வைத்துவிட்டு சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், என் மண் என் மக்கள் யாத்திரையின் 190வது தொகுதியை நிறைவு செய்யும் வகையில்,  அதில் கலந்துகொள்ள தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகையை முன்னிட்டு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், சுமார் 1மணி நேரம் காக்க வைத்துவிட்டு, இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சொல்கிறார்கள்,

ஆனால், கடந்த 1ந்தேதி நீட் எதிர்ப்பு பேரணி என்ற பெயரில் பேருந்து மூலம் 1000 மாணவர்களை அழைத்து வந்து ராயப்புரத்தில் பேரணி நடத்தினார்கள், கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இல்லை என்ற நிலையில், இதற்கு மட்டும் எப்படி பேருந்து கொடுக்கப்பட்டது என்றுகேள்வி எழுப்பியவர், வாலாஜா சொலையில், வருடத்திற்கு 25முறை  பலர் பிறந்த நாளுக்கு ஊர்வலம் செல்கிறார்கள். எங்களுக்கு அந்த இடத்திலாவது அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம், ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர்,  பச்சையப்பன் கல்லூரி அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமி கேட்டோம், அங்கு  பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர் என்றார்.

மேலும் எங்கள் யாத்திரை ஒன்றும் வெறும் சமாதிக்கு செல்லும் ஊர்வலம் அல்ல, மக்கள் பிரச்சினை குறித்த யாத்திரை.  இதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்,.