பாஜக எம்.பி.யும் பாலிவுட் ஆக்சன் ஹீரோவுமான சன்னி தியோலின் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலத்துக்கு வந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இந்த ஏல அறிவிப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இ-ஆக்சன் எனும் மின்னணு ஏல முறையில் சன்னி தியோலுக்கு சொந்தமான மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள 6500 சதுர அடி நிலம் செப்டம்பர் 25 ம் தேதி ஏலம் விடப்பட இருந்தது.

2015-16 ம் நிதி ஆண்டில் தனது பட தயாரிப்புக்காக பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் வாங்கிய நிலையில் அந்த கடனுக்காக அடமானமாக வைக்கப்பட்ட இந்த சொத்து ஏலத்துக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாஜக எம்.பி.யின் சொத்து ஏலம் குறித்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் அந்த தளத்தில் இருந்து மாயமானது. இதுகுறித்து பேங்க் ஆப் பரோடா வங்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக இந்த அறிவிப்பு வெளியானதாக விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோல் சொத்து ஏல அறிவிப்பில் என்ன மாதிரியான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது? அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.