சென்னை,

யிர்க்கொல்லி விளையாட்டான  புளுவேல் கேம் விளையாடிய வடசென்னை  பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையை தூண்டும் புளுவேல் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டிலும் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

வடசென்னை  வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்த பாபு  என்பவரின்   மகன் கிஷோர். இவர் கன்னிகாபுரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாகவே யாரிடமும் சரிவர பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளதாக வும், எப்போதும் மொபைலில் விளையாடி வந்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்த கிஷோர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவனின்  உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மாணவன்  கிஷோர்  செல்போனில் புளுவேல் விளையாடி வந்திருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை மாணவர் ஒருவரும், நேற்று பாண்டிச்சேரியில் ஒரு கல்லூரி மாணவரும் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்வது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாகவே வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.