ஸ்ரீநகர்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக வட்டார மேம்பாட்டு கவுன்சில் தேர்தல், வரும் அக்டோபர் 24ம் தேதி நடைபெறவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகவலை ஸ்ரீநகரின் முதன்மை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மொத்தமுள்ள 316 வட்டாரங்களில் 310 வட்டாரங்களுக்கான பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம், புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய வட்டார தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறாது. மேலும், பெண் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறாது. ஏனெனில், இதுவரை எந்தப் பெண் வேட்பாளரும் போட்டியிட முன்வரவில்லை.

மொத்தம் 3300 தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் 115 தேர்வுசெய்யப்பட்ட ஊராட்சிகள் ஆகியவை வட்டார மேம்பாட்டு கவுன்சிலில் இடம்பெறுகின்றன. இவைகளின் மேம்பாட்டிற்காகவே தேர்தல்கள் நடைபெறுகின்றன.

தேர்தல் நடைமுறைப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன என்றும், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.