பொது மக்களுக்கு மட்டும் இந்த கொடூர கொரோனா ஊரங்கெல்லாம், குற்றவாளிகளுக்கில்லை. மத்தியபிரதேசம் போபால் பகுதியை சேர்ந்தவர் 53 வயது பார்வையற்ற வங்கி அதிகாரி. இவரது கணவர் ஊரடங்கினால் ராஜஸ்தானில் சிக்கி கொள்ள போபாலில் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்திருந்திருக்கிறார், சம்பவம் நடந்த அன்று.

பால்கனி வழியே புகுந்த 23 வயது சாகுலால் என்ற மனோஜ் கோல், இவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இவரது மொபைல், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ. 30,000/- இவற்றுடன் அவரை உள்ளே வைத்து பூட்டி விட்டு தப்பி விட்டான். பின்னர் உதவிக்காக இவர் கூக்குரல் எழுப்ப, அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து காப்பாற்றி, போலிசுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பார்வையற்றவர் என்பதால் குற்றவாளியின் குரலை தவிர வேறு எந்த விபங்களையும் அவர் அறிந்திருக்கவில்லை. இது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக போய்விட்டது.

அடுத்து போலீசார் பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனின் சிக்னலை டிராக் செய்த போது, அது கடைசியாக அந்த பகுதியில் கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் கடைசியாய் ஸ்விட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது அடுத்த பெரிய சவால் போலீசாருக்கு. குற்றவாளியை தேடி கைது செய்ய இந்த கொரோனா பாதிப்பு பகுதிக்குள் செல்வதை தவிர வேறு வழியில்லை போலீசாருக்கு.

காவல்துறை அதிகாரி சந்திரகாந்த் படேல், எஸ்பி(தெற்கு) சாய் கிருஷ்ண தொட்டாவுடன் இணைந்து, கொரோனா பயத்தையும் மீறி, அப்பகுதியின் சந்து பொந்து ஒன்று விடாமல் தேடி அலைந்து குற்றவாளியை கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தது பெரும் சாதனை தான்.

இப்போது குற்றவாளியை அடையாளம் காண போலீசாருக்கு இருக்கும் ஒரே வழி குற்றவாளியின் குரல் மட்டுமே. பாதிக்கப்பட்டவர் எதிரில், குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்த போது பேசிய அதே வார்த்தைகளை பேச செய்து அவரை அடையாளம் காண வைத்து, அதை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புதிய சாதனை ஒன்றையே படைத்துள்ளனர்.

இந்த குற்றவாளி வேறொரு குற்றத்தில் சிறை சென்று தண்டனை முடிந்து போன வாரம் தான் விடுதலையாகி வெளியே வந்துள்ளான் என்பது கூடுதல் தகவல்.

லெட்சுமி பிரியா