டில்லி:
ருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்ளாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரின் நீதிமன்ற காவல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலஅமைச்சருமான டி.கே.சிவ குமார் மீது  வருமான வரித்துறை,  அமலாக்கத்துறை கருப்பு பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரிடம் பலமுறை விசாரணை நடத்தியது.

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம், அவரை விசாரணைக்கு டில்லிக்கு வரவழைத்த நிலையில், அதைத்தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை  அக்டோபர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டில்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டி.கே.சிவகுமார் மீது உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சிவகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரிடம் சரியாக விசாரணை நடத்த முடியவில்லை, எனவே அவரின்  நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு  கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹார்,  சிவகுமாரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் திகார் சிறையில் சிவகுமாரிடம் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.