கறுப்பு பணத்தை ஒழிக்கவே 500,1000 நோட்டு தடை உத்தரவு என்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால் இதனால் எல்லாம் கறுப்பு பணம் ஒழியாது என்பதையும், உண்மையில் கறுப்பு பணத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அறிவு பூர்வமாக, யதார்த்தமாக சொல்லும் வீடியோ இது.
ஆனால் பாஜகவினர் பார்த்தால் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
ஏனென்றால், “ 500, 1000 நோட்டு தடையால் கிட்டதட்ட கறுப்பு பணமே ஒழிந்துவிட்டது” என்றல்லவா சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!
ம.க.இ.க. அமைப்பின் மாநில செயலாளர் மருதையன் பேசும் இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
“பஹாமாஸ் என்று ஒரு தீவு நாடு. இதன் மக்கள் தொகையே மூன்றரை லட்சம்தான். இந்ததீவுக்கு 2008ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 22 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி ஆனது.
ஆனால் அடுத்த இரண்டாண்டில் (2010ல்) இந்த மதிப்பு 28 ஆயிரம் லட்சம் டாலராக உயர்ந்தது.
இந்த அளவுக்கு பஹாமாஸ் தீவுக்கு ஏற்றுமதி செய்தது இரண்டு நிறுவனங்கள். அவை ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார்.
இவர்கள் ஏற்றுமதி செய்தது பெட்ரோல் என்று கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.
மூன்றரை லட்சம் மக்கள் தொகை உள்ள அந்த பஹாமாஸில், மக்கள் 24 மணி நேரமும், காரிலேயே சுற்றிக்கொண்டிருந்தாலும் பெட்ரோலிலேயே குளித்து, பெட்ரோலையே குடித்து வாழ்ந்தாலும் இந்த அளவுக்கு பெட்ரோலை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இல்லை.
இன்னொரு உதாரணம், கர்நாடக பாஜகவின் ரெட்டி சகோதரர்கள். சுஷ்மா சுவராஜின் அபிமான பிள்ளைகள்..
இவர்கள், பெல்லாரி மாவட்டத்தில் இருந்து இரும்பு மற்றும் கனிமங்களை 5000 முறை கப்பல்களில் ஏற்றுமதி செய்ததாக துறைமுக கணக்குகள் சொல்கின்றன. ஆனால் சுங்கத்துறை கணக்கோ 1000 முறை என்கிறது. ஆக, மிச்சம் 4000 முறை ஏற்றுமதி செய்யப்பட்டது என்ன.. அதில் புரண்ட தொகை எவ்வளவு… அத்தனையும் கருப்பு பணம்தானே.
1998க்கும் 2004க்கும் இடையிலான வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் இந்திய வரலாற்றிலேயே அதிகமாக கறுப்பு பணம் புழங்கியது என்கிறது உலக வங்கி அறிக்கை.
இன்னொரு சம்பவம். வோடோ போன் வரி ஏய்ப்பு வழக்கு நினைவிருக்கிறதா. அந்த வழக்கில் வோடோபோன் நிறுவனத்திடம் இருந்து வரி வசூலிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டது. அதற்கு பிறகு வரி ஏய்ப்பைத் தடுக்க அப்போதைய காங்கிரஸ் அரசின் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு சட்ட முன்வடிவை கொண்டுவந்தார். அதை எதிர்த்து ஆவேசமாக குரல் கொடுத்தவர் இன்றைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிதான்.
ஆக கறுப்பு பணம் என்பது பெட்டியில் வைத்திருப்பதை எடுப்பதல்ல.. கறுப்பு நடவடிக்கையை தடுப்பதே.”
வீடியோ லிங்க்:
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/11/15137317_220542898370490_325874085168939008_n.mp4[/KGVID]