சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் பாஜக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, சட்டமன்ற தேர்தலில் அதிமுக மேலும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்பட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சியும் , தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம், எந்தெந்த திட்டங்களை கொண்டு வருவோம் என அறிவிப்புகளை வாரியிறைத்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றன. ஆனால், பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையோ, தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரான போக்கில் உள்ளது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு எதிராகவும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில், மதமாற்ற தடை சட்டம் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு சட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தியதும், அதன் காரணமாக, அடுத்த தேர்தலில் அவர் மண்ணை கவ்வியதும் மறைந்து விட முடியாது. பின்னர் மதமாற்ற தடை சட்டத்தை ஜெயலலிதா நீக்கினார். இந்த நிலையில், பாஜக மீண்டும் மதமாற்ற சட்டத்தை கொண்டு வருவோம் என கூறியிருப்பது உள்பட பல அறிவிப்புகள், அதிமுகவுக்கு ஆப்பு வைப்பதாகவே உள்ளது.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள சில கருத்துக்களை காணலாம்..
தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், விவசாயிகள் நலன், மகளிர் நலன், கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல், தொழில் வளர்ச்சி, தமிழ் வளர்ச்ச்சி, இலங்கை தமிழர்கள், சென்னை மாநகராட்சி, சட்ட மேலவை என்று பல தலைப்புகளின் கீழ் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,
சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும்
18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்
தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்
விவசாயிகளுக்கு போன்று மீனவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும்
50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
தென் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்
பூரண மதுவிலக்கௌ தமிழகத்தில் அமல்படுத்தப்படும்
ஹிந்துக்களின் கோயில் நிர்வாகம் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் கொடுக்கப்படும்
8,9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச டேப்லட் வழங்கப்படும்
விவசாயத்துக்கான தனி பட்ஜெட்
சட்டமேலவை மீண்டும் அமைக்கப்படும்
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையில் ஈரடுக்கு மேம்பாலம்.
சாகர் மாலா திட்டம்
பயோ எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு
வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வீடு கட்டித் தரப்படும்,
மாட்டிறைச்சி தடை,
மதமாற்ற தடை சட்டம்
உள்பட ஏராளமான சர்ச்சைக்குரிய வகையிலான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே மேலும் வெறுப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில், சிஏஏ சட்டம் கொண்டு வர மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால், பாஜக அரசு, அதை அமல்படுத்துவோம் என்று கூறி வருகிறது. இதுமட்டுமின்றி, தற்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகள் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையானது, ஒற்றுமையாகவும், சகோதரத்துடன் வாழ்ந்து வரும, தமிழர்களின் உணர்வுகளை சீண்டும் வகையில் இருப்பதாகவும், மாநில உரிமையை நசுக்கும் வகையில் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை, அதிமுகவுக்கு சாவுமணி அடிக்கும் வகையில் வெளியிடப்பட்டு இருப்பது, அதிமுக தலைமையிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேண்டா விருந்தாளியாக அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை ஒரேயடியாக நசுக்கும் வகையில், சர்ச்சைக்குரிய வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அதிமுகவின் தோல்வியை உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே வெளியாயுள்ள ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு பாதகமாகவே உள்ளது. இதனால், நொந்துபோய் கடுமையான மன உளைச்சலில் உள்ள அதிமுக தலைமை, தற்போது பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையால் அதிர்ச்சிக்குள்ளாகி, பாஜக மீது கொலை வெறியில் உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது, அதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு உழவனாக பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன்.
பயோ எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை உழவர்களே பூர்த்திசெய்யும் நிலை உருவாகப்போகிறது. உழவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதற்காகத் தமிழ்நாட்டு பாஜகவுக்குப் பாராட்டுகள்.
அரிசி, நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பொருள்களிலிருந்து பயோ எத்தனாலை உருவாக்க வேண்டும்.
இந்தியா – இலங்கை இடையே பல பிரச்சினைகள் உள்ளன. 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாகர் மாலா திட்டத்துக்கு 6 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையில் ஈரடுக்கு மேம்பாலம் வர உள்ளது. சாகர் மாலா திட்டம் நிறைவேறினால் இந்திய எல்லையிலேயே மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம். 100 நாட்டிக்கல் மைல் வரை தமிழ்நாட்டு மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம்” என்றார்.
மொத்தத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை, தன்னுடன் சேர்த்து, அதிமுகவையும் புதைகுழிக்குள் இழுத்து சென்றுவிடும் என்பதை மறுக்க முடியாது.
பாஜக தேர்தல் அறிக்கை: Tamil Nadu 2021 Assembly Election BJP Manifesto