சென்னை: காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பாஜகவின் கனவு எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, டெல்லியில் இருந்த சென்னை திரும்பியவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தற்போது வரவுள்ள தேர்தல் அனைவருக்கும் முக்கியமான தேர்தல். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது. வரலாறு காணாத வெற்றியை ஜனநாயக கட்சிகளுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனித் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கட்சித் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது என்றவர்,
அண்ணாமலை பேசுவதையெல்லாம், தமிழ்நாட்டில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் மாற்றம் ஏற்படத் தேவை உள்ளது. இளைஞர்களை வைத்து கட்டமைப்பதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைத் தாண்டியும், அவர்களுக்கு அரசியலில் பங்கீடு கொடுக்க வேண்டியதற்கான முயற்சி எடுப்பேன். எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது என்றும், பாஜகவினர் விமர்சனத்தில் குறைந்தபட்ச நம்பிக்கைத்தன்மை கூட இருக்காது. அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தெளிவான மக்கள். எந்த சித்தாந்தத்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என மக்களுக்குத் தெரியும்.
இவ்வாறு கூறினார்.