
இந்தியாவின் வேறுபல மாநிலங்களில், தேர்தல் அரசியலுக்காக தான் பயன்படுத்தி வென்ற பல உத்திகளை, தமிழ்நாட்டிலும் ஒவ்வொன்றாக பயன்படுத்தி பரிசோதித்து வருகிறது பாரதீய ஜனதா.
இதில், பலவற்றில் தோல்வி கண்டு, இறுதியில் பெரியாரை புகழ்ந்துபேசும் நிலைக்கு அக்கட்சி வந்துள்ளது. அதுவும், அக்கட்சியின் பிராமணரல்லாத தலைவர்களே பெரியாரை உயர்த்திப் பேசும் வேலையை செய்து வருகிறார்கள்.
தற்போது, வேறு கட்சிகள் மற்றும் வேறு பின்புலங்களைச் சார்ந்த பல பிரபலங்களை தன் கட்சியில் இணைத்து, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளது பாரதீய ஜனதா. இந்த உத்தி வேறு சில மாநிலங்களில் பலனளித்திருக்கலாம் அல்லது அங்கே இனிவரும் நாட்களில் எடுபடலாம்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு மைய தலைமையை சுற்றியே தேர்தல் அரசியல் இதுநாள் வரை நகர்ந்து வருகிறது. அந்த மைய தலைமையை மீறிய வேறுசில தனிமனிதர்களுக்கான தேர்தல் வெற்றிகள் என்பவை மிக மிக அபூர்வம் இங்கே!
அவர்கள் சுயேட்சையாக மிக அரிதாகவே வென்றுள்ளார்கள். ஆனால், பலர் அவமானகரமாக தோற்றுள்ளார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, பிரதான கட்சிகளுக்கிடையே ஆட்களில் சிலர் கட்சி மாறிக்கொண்டிருந்தாலும், தேர்தல் வெற்றி-தோல்வி என்பது, கட்சிகளை மையப்படுத்தியும், கூட்டணிகளை மையப்படுத்தியுமே அமைந்துள்ளன.
எனவே, பாரதீய ஜனதாவின் இந்த பிரபலங்களை முன்னிறுத்திய அரசியல் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது!
Patrikai.com official YouTube Channel