சென்னை:
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், முரளிதரராவ் கூறியது அவரது சொந்த கருத்து என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
இதன் காரணமாக அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சி தொண்டர்களும் என்னப்பா… நடக்குது அங்கே என்ற வடிவேலு தொனியில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்…
தமிழக பாரதியஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே பாஜக, அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில், சில தொகுதிகள் குறித்து இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முரளிதர ராவ் கூறியது அவருடைய சொந்த கருத்து என்று கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் செந்தில்வேல்குமார், சாதனை முயற்சியாக ஒரு கையை கட்டிக்கொண்டு 15 மணி நேரம் இடைவிடாமல் கிரிக்கெட் பந்து வீசி வருகிறார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கூட்டணி குறித்து அதிமுக தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்றும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றவர், திமுக, அமமுக கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
இரு கட்சியிடையே கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்சி தலைவர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதால், பாஜக அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.