திருச்சூர்:

பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்டதில் கம்யூனிஸ்ட்டுக்கு  தொடர்பு இருக்கிறது என்ற பாஜக குற்றச்சாட்டு பொய்த்துள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் முக்கட்டுக்கார என்ற இடத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கடந்த 12ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தொண்டரும், பாஜக.வின் யுவ மோர்ச்சா தலைவருமான நிர்மல் என்ற 20 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த கொலை சம்பவத்துக்கு கேரளா ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என்று அம்மாநில பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் 7 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரஜ், சித்து, யேசுதாஸ், அருண், சச்சின் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். இதில் அருண் என்பவர் பாஜ.வின் தீவிர தொண்டர். இந்த கொலைக்கு முழுக்க முழுக்க தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்கு பின்னால் கம்யூனிஸ்ட் கட்சியனர் உள்ளனர் என்று ஏராளமான பாஜ நிர்வாகிகள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். தற்போது விசாரணையின் முடிவு அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜ மாநில தலைவர் குமணன், இந்த கொலைக்கு பின்னால் கம்யூனிஸ்ட்கள் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.