மைசூரு: கர்நாடகாவில் ‘சிரா’ சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா வென்றுள்ளதானது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன்மூலம், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் கவனம் பெற்றுள்ளார்!

ஏனெனில், பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள இத்தொகுதியில் ஒக்கலிகா வாக்காளர்கள் மிக அதிகம். குறிப்பாக, குஞ்சட்டிகா ஒக்கலிகா சமூகத்தவர் அதிகம். கர்நாடகத்தில், பாரம்பரியமாக லிங்காயத்துகளின் கட்சியாக இருந்துவருகிறது பாரதீய ஜனதா.

அக்கட்சிக்கு ஒக்கலிகர்களின் வாக்குகள் பொதுவாக கிடைக்காத காரணத்தால்தான், அக்கட்சியால், தேர்தலில் பெரும்பான்மை பெற முடிவதில்லை.

இந்த ‘சிரா’ தொகுதி இடைத்தேர்தலை, பா.ஜ. சார்பாக பொறுப்பேற்றுக் கொண்டவர் தற்போதைய முதல்வர் எடியூரப்பாவின் இளைய மகன் விஜ‍யேந்திரா.

இத்தொகுதியில், பா.ஜ. வேட்பாளர் டாக்டர்.ராஜேஷ் கெளடா, காங்கிரஸ் வேட்பாளர் டிபி ஜெயச்சந்திராவை வீழ்த்தியுள்ளர். பா.ஜ. வேட்பாளர் குஞ்சட்டிகா ஒக்கலிகா  சமூகத்தைச் சேர்ந்தவர்.

இதற்கு முன்பாக, ஒக்கலிகா கோட்டையான கேஆர் பேட்டே இடைத்தேர்தலிலும் பாரதீய ஜனதா வென்றது இதே விஜயேந்திராவால்தான் என்று கூறப்படுகிறது. இந்த விஜயேந்திரா பா.ஜ. தலைவர் அமித்ஷாவை போல் களப்பணியாற்றக்கூடியவர் என்று புகழ்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

அதனால் சாத்தியமானதுதான் இந்த வெற்றி என்றும் கூறுகின்றனர். எடியூரப்பாவின் அரசியல் வாரிசாக கருதப்படும் விஜயேந்திரா, வரும் 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.