அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 சட்டசபை தொகுதிகளையும் ஆளும் பாரதீய ஜனதா வென்றது.
குஜராத் மாநிலத்தில் அப்தசா, கர்ஜான், மோர்பி, கடடா, டாரி, லிம்ப்டி, கப்ரடா மற்றும் டாங் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியிலிருந்து காவிக் கட்சிக்கு மாறிவந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளும் இவற்றுள் அடக்கம்.
இந்நிலையில், அனைத்து தொகுதிகளையுமே பாரதீய ஜனதா கைப்பற்றியுள்ளது. காங்கிரஸிலிருந்து கட்சி மாறிய பிரத்யுமன்சின் ஜடேஜா, அப்தசா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 36778 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல்களில் முழு வெற்றியைப் பெற்றதையடுத்து, பாரதீய ஜனதா தொண்டர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி, கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.