கோவை: கோவையில் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டு கடைகள்  மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர்.

கோவையில் பிரச்சாரத்துக்காக வந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புலியகுளத்திற்கு சென்று கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் தேர்முட்டி சென்றார். அங்கு கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணி ஒன்றை கோவையில் பெரிய அளவில் பேரணி நடத்தினர். அப்போது வழியில் இருந்த கடைகளை அடைக்கச் சொல்லி, கற்களை வீசி அராஜகத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது தேர்தல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் கடைகள் மீது கற்களை வீசியது, பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.