சென்னை: அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் ஊழல் பட்டியல் மிக நீளம் என்று கூறியதுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவரான அமித்ஷா கூறி வருகிறார். அதை சில பாஜக தலைவர்கள் வரவேற்று உள்ளனர். ஆனால், கூட்டணி கட்சியான அதிமுக அதை மறுத்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் தென்மாநிலங்கள் அவற்றின் சொந்த மொழிகளிலேயே இயங்க வேண்டும் என விரும்புவதாக கூறியவர், சிஏபிஎஃப், ஜேஇஇ, நீட், யுஜிசி தேர்வுகள் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகள் தமிழில் ஏன் கற்றுத் தருவதில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா வெளிநாட்டு மொழிகளில் இயங்க வேண்டும் என்பவர்களுடனேயே தங்களது போராட்டம் என கூறிய அவர், தமிழில் கற்பிப்பதை எதிர்ப்பதுதான் நிலைப்பாடு என்றால் அதில் தனக்கு பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனக்கூறிய அமித்ஷா, ஆட்சியில் பாஜக பங்கு பெறும் எனவும் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
நெறியாளர் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்ன? என எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.மு.க., ஆட்சியில் நடக்கும் மாபெரும் ஊழல்கள். அந்த பட்டியல், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெகு நீளமானது என்றார்.
* மதுபான ஊழல் 39,775 கோடி ரூபாய்
* மணல் ஊழல் 5,800 கோடி ரூபாய்
* எரிசக்தி ஊழல் 4,400 கோடி ரூபாய்
* எல்காட் ஊழல் 3,000 கோடி ரூபாய்
* டிரான்ஸ்போர்ட் ஊழல் 2,000 கோடி ரூபாய்
* டி.என்.எம்.எஸ்.சி., ஊழல் 600 கோடி ரூபாய்
* ஊட்டச்சத்து ஊழல் 450 கோடி ரூபாய்
* இலவச வேட்டி ஊழல் 60 கோடி ரூபாய்
இவை தவிர, வேலைக்கு பணம், 100 நாள் வேலை திட்ட ஊழல் ஆகியவையும் உண்டு என்றார்.