பாட்னா :

“ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றிருந்தன.

சுஷில்குமார் மோடி – சிராக் பஸ்வான்

பஸ்வான் மறைந்ததால், அவர் மகன் சிராக், கட்சி பொறுப்பை ஏற்றார்.
தேசிய அளவில் அவரது கட்சி பா.ஜ.க., கூட்டணியில் இருந்தாலும், பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

இதனால் ஐக்கிய ஜனதா தளம் 30 இடங்களில் தோற்க நேரிட்டது. லோக் ஜனசக்தியை பழி வாங்க காத்திருந்த ஐக்கிய ஜனதா தளத்துக்கு இப்போது ,அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ராம்விலாஸ் பஸ்வான். பீகாரில் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார். அவரது மறைவால் காலியான அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பஸ்வான் மனைவி ரீனாவை நிறுத்த லோக் ஜனசக்தி திட்டமிட்டது.

ஆனால் அவரை ஆதரிக்க நிதீஷ்குமார் கட்சி மறுத்து விட்டது. எனவே பா.ஜ,க.வே, அந்த இடத்துக்கு போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் , பா.ஜ,க.வை ஆதரிக்கும் என்பதால், அந்த கட்சி வேட்பாளர் வெல்வது உறுதி. இந்த இடத்துக்கு, பீகார் முன்னாள் துணை முதல்-அமைச்சர் சுசில் குமார் மோடி நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

– பா. பாரதி