புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் இந்து பெரும்பான்மை மாநிலமாக இருந்திருந்தால், அதன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து பொறுப்பற்றது என்றும் வகுப்புவாதத்தை தூண்டக்கூடியது என்றும் பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

“இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு முனிசிபாலிட்டி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது. சட்டப்பிரிவு 371ன் கீழ் இதர மாநிலங்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. ஆனால், ஜம்மு-காஷ்மீரை மட்டும் எதற்காக குறிவைக்க வேண்டும். இதற்கு மதவெறிதான் காரணம்” என்று கருத்து தெரிவித்திருந்தார் ப.சிதம்பரம்.

ஆனால், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இது பொறுப்பற்றது என்றும், வகுப்புவாதத்தை தூண்டக்கூடியது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளஹானும், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும், காஷ்மீர் நடவடிக்கைக்கு மதச்சாயம் பூசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அமைச்சர் நக்வி, “தற்போதைய அரசு, பல பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறை தற்போது சரிசெய்துள்ளது. தேசிய நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை மதச்சாயம் பூசி விமர்சிப்பது சரியல்ல” என்றுள்ளார்.