புதுச்சேரி: மாநில  ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுகவும் தனது பங்குக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்க அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த திமுக, காங்கிரஸ் கூட்டணி திட்டம் தீட்டி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் 4ந்தேதி அன்று மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. இதையடுத்து, ராஜ்யசபா பதவியை பெற கட்சிகளிடையே கடுமையான போட்டிகள்  ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர்  என 9 பேர் உள்ளனர். இதனால், தங்களது ஆதரவாளருக்கே ஆதரவு தர வேண்டும் என கூட்டணி கட்சியான  என்.ஆர்.காங்கிரசை நெருக்கி வருகிறது. அதற்கான தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கியுயுள்ளது.

அதே வேளையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என முதல்வர் என்.ஆர். ரங்கசாமி விரும்புகிறார்.  முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை எம்.பி.யாக்க ரங்கசாமி முயற்சி எடுத்து வருகிறார். இதனால், இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் முட்டல் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில்,  முதல்வர் ரங்கசாமியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷ் சந்தித்து பேசியது மேலும் சலசலப்பை எற்படுத்தி உள்ளது.

அதுபோல, என்.காங்கிரஸ், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும், தங்களுக்கு எம்.பி. பதவியை வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளது. இதனால், முதல்வர் ரங்கசாமி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளாகி உள்ளார். அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாததால், அவர்களால் ஏதும் செய்ய முடியாது. அதே வேளையில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டால், ராஜ்யசபா எம்.பி பதவியை எளிதில் கைப்பற்றி விடலாம். ஆனால், இரு கட்சிகளும் மோதலில் ஈடுபட்டுள்ளதால், அதை தங்களுக்கு சாதகமாக திமுக காங்கிரஸ் கூட்டணி முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் திமுகவுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதால், இக்கூட்டணிக்கு 8 பேர் ஆதரவு உள்ளது. அங்குள்ள தற்போதுள்ள அரசியல் சுழலைத் தொடர்ந்து,  புதுச்சேரி திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மாநில எம்.எல்.ஏ.க்களை அழைத்து விவாதித்தார்.இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இதனால், அங்கு  பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியில் உள்ள பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களின் வாக்குகளை பெற முடியுமா என்பது குறித்து விவாதித்ததாகவும்,   என்.ஆர்.கான்கிரஸ் – பாஜக இடையே வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டால், அதை தங்களுக்கு சாதமாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், மாநில பாஜகவின் ஒரு தரப்பினர் டெல்லி தலைமையை சந்திக்க அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி என்றாலே குழப்பம் என்ற வார்த்தைக்கு ஏற்ப அங்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் உறுதிப்படுத்து கின்றன.