மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சிவசேனா கட்சியை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ சிபாஜி கார்திலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத் கூறுகையில், ‘‘ சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்த காரணத்தால் தான் இந்த 2 கொலைகளும் நடந்துள்ளது. பாஜக எம்எல்ஏ குற்றவாளிகளின் கூடாரத்தை நடத்தி வந்துள்ளார். அரசியல் மோதல் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. சிபாஜி கார்திலேவை பாஜக.வில் இருந்து நீக்க வேண்டும்.

எதிர்கட்சிகளை அமித்ஷா எலி, பாம்பு, பூனை, நாய் என்று அழைக்கிறார். ஆனால், தற்போது பாஜக.வில் உள்ள பூனை, நாய்கள் எல்லாம் மாநில அரசியலை சீரழித்து விட்டது. இவர்களை போன்றவர்களின் உதவியுடன் தான பாஜக ஆட்சிக்கு வந்தது. வாஜ்பாய், அத்வானி காலத்தில் பாஜக.வுக்கு என்று சில கொள்கைகள் இருந்தது. அதெல்லாம் தற்போது இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்துறையையும் தன் வசம் வைத்துள்ளார். இந்த துறையை கையாள தனியாக யாரையும் நியமிக்கவில்லை. இது போன்ற தோல்விகள் காரணமாக தான் தற்போது கொலை நடந்துள்ளது. எதிர்கட்சிகளை அடக்குதல், தேர்தல்களை நிர்வாகம் செய்வது போன்ற பணிகளில் தான் உள்துறை ஈடுபடுகிறது.

2014ம் ஆண்டில் கூட்டணி முறிந்துவிட்டது. 25 ஆண்டுகால நட்பை மறந்துவிட்டோம். தற்போது கோராக்பூர் மற்றும் பூல்பூர் தேர்தல முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி குறித்து பேச வருகின்றனர். காலம் கடந்து விட்டது. திருமண முறிந்துவிட்டது’’ என்றார்.