ஐதராபாத்: மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ், பாஜகவை வங்கா விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். மேலும்,  பா.ஜ.க என்ன செய்தாலும் அதை அமைதியாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியஅரசு நேற்று தாக்கல் செய்த பொதுநிதி நிலை அறிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சாமானிய மக்களுக்கு எந்தவொரு நலனும் அறிவிக்காத நிலையில், உயர்வகுப்பினர் உபயோகப்படுத்தும் வைரம் போன்ற பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஏழை மக்கள் உபயோகப்படுத்தும்  குடைக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட் ஜீரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள் பட்ஜெட்டை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  நம் பிரதமர் குறுகிய பார்வை கொண்டவராக இருக்கிறார், பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்றி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

நாங்கள் பா.ஜ.க என்ன செய்தாலும் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று எச்சரித்தவர்,  நாட்டுக்கு எது நல்லதோ, எது தேவையோ, அதை கண்டிப்பாக செய்வோம். நாம் அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்/ இது ஜனநாயக நாடு. பா.ஜ.க அரசு மக்களை மோசமாக ஏமாற்றுகிறது. நான் இந்த தேசத்தை நம்புகிறேன்.  இப்போது மாற்றத்திற்கான தேவை வந்திருக்கிறது. நாட்டின் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம் நாட்டிற்கு ஒரு புரட்சி தேவையாக இருக்கிறது என்று கூறியவர், இதுதொடர்பாக மும்பைக்கு சென்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து பேசப்போகிறேன் என்று தெரிவித்தார்.

இவ்வாறு கூறினார்.