“பட்டாசு வெடித்தால் கொசுக்கள் அழியும். இதனால் டெங்கு நோய் பரவல் தடுக்கப்படும். இதனால்தான் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்” என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நாராயணன் முகநூலில் பதிவிட… இதை ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நாராயணனை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:
“ஏ.டி.எஸ். என்ற கொசுவே டெங்கு ஜூரம் ஏற்பட காரணமாகிறது. தவிர பொதுவாக கொசுவினால் மலேரியா போன்ற பல நோய்கள் காலம் காலமாக பரவி வருகின்றன.
இந்த கொசுக்கள், அக்கோடர் நவம்பர் மாதங்களில்தான் அதாவது மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். அதாவது மழை பெய்து தண்ணீர் தேங்கி கொசு பரவுகிறது… கூடவே அவற்றால் நோய்களும் பரவுகின்றன.
இதைத் தடுக்கவே நம் முன்னோர்கள் தீபாவளியை முன்னிட்டு வெடிகளை வெடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். இப்படி ஒரே நேரத்தில் பலரும் வெடிகளை வெடிப்பதால், பட்டாசு புகையினால் வெப்ப நிலை குறையும். இந்த குறைந்த தட்பவெப்ப நிலையில் கொசுக்கள் வாழ முடிவதில்லை. இனப்பெருக்கமும் செய்ய முடிவதில்லை.
டில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது, பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பிரச்சாரம் நடந்தது. அப்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், “ இது போல பிரச்சாரம் செய்ய வேண்டாம். பட்டாசு வெடிப்பதால் கொசுக்கள் குறையும்” என்று கேட்டுக்கொண்டனர்.
சிலர், பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டே சில நூறு வருடங்கள்தான் ஆகின்றன என்கிற போது, புராண காலத்தில் எப்படி பட்டாசு வெடித்திருப்பார்கள் என்று கூறுகிறார்கள். இது அறியாமை.
கம்பராமாயணத்திலேயே பட்டாசு வருகிறது. அதாவது ராமர் பட்டாபிஷேகத்துக்கு வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டதாக வருகிறது. வாண வேடிக்கைதான் பட்டாசு.
ஒரு வாதத்துக்காக, 200, 300 வருடங்களாகத்தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். 200,300 வருடங்களுக்கு முன் இருந்தவர்களும் நம் முன்னோர்கள்தானே..!” என்றார் நாராயணன்.