பாராளுமன்ற மதீப்பீட்டுக் கமிட்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு இண்டிகோ விமானம் மூலம் சென்னை திரும்பிய மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

பயணிகள் அனைவரும் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், விமானத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த தயாநிதி மாறனிடம் வந்த விமானி “நீங்களும் இந்த விமானத்தில் தான் பயணிக்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.

ராஜிவ் பிரதாப் ரூடி

பரிச்சயமான குரலாக இருந்தாலும் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரை யாரென்று உடனே அடையாளம் காண முடியாத மாறனுக்கு முகக்கவசத்தையும் மீறி கண்கள் வழியே மலர்ந்த அவரது புன்னகையை வைத்து அடையாளம் தெரிந்தது.

தன்னுடன் சில மணி நேரங்களுக்கு முன் பாராளுமன்ற மதீப்பீட்டுக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜிவ் பிரதாப் ரூடி என்பது புரிந்தது.

பின்னர் மாறனிடம் பேசிய எம்.பி.யும் விமானியுமான ராஜிவ் பிரதாப் ரூடி அடிப்படையில் தான் ஒரு விமான ஒட்டி என்பதால், இப்போதும் பல நேரங்களில் விமானங்களை இயக்கி வருவதாகக் கூறினார்.

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தயாநிதி மாறன் “எனது தந்தை முரசொலி மாறனுடன் மத்திய அமைச்சராக அமைச்சரவையில் ஒன்றாக பணியாற்றியவர் நான் பயணித்த விமானத்தை இயக்கியது எனக்கு பெருமையாக இருக்கிறது, இந்த தருணத்தை என் வாழ்நாளில் மிகவும் முக்கிய நிகழ்வாக நினைவுகொள்வேன்” என்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.