டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்துள்ள நிலையில், தேர்வு முறையில் சில மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.  கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில், நீட் தேர்வில் இன்டர்னல் சாய்ஸை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான (2021)  நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ந்தேதி நாடு முழுவதும்  நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொங்கி உள்ளது. இதையடுத்து,  National Testing Agency விண்ணப்ப படிவங்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாலும், விருப்பத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

விண்ணப்பம்-பதிவு-பதிவு செயல்முறை ntaneet.nic.in அல்லது nta.ac.in இல் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்துக் கொள்பவர்கள் ஆகஸ்டு 6ந்தேதி  வரை விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வுக்கான வினாத்தாளில் இந்த ஆண்டு விருப்பத் தேர்வுகள் (Choice) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நீட் 2021 இல் உள்ள ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று 4 பாடங்களும் Section-A, Section-B என்று பிரிக்கப்பட்டுள்ளது.

Section A-ல் 35 கேள்விகளும், Section B-ல் 15 கேள்விகளும் இடம்பெறும் என்றும், மாணவர்கள் Section A-ல் உள்ள 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்றும், Section B-ல் உள்ள 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மொத்த கேள்விகளின் எண்ணிக்கையும், தேர்வுக்கான கால அவகாசமும் மாறாமல் அப்படியே இருக்கும். அதாவது 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா கேள்விகளும் MCQ எனப்படும் multiple-choice questions வடிவத்திலேயே இருக்கும்.

நெகடிவ் மார்க்கிங்கும் உண்டு. அதாவது தவறான ஒரு பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால், அதற்கு நான்கு மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

நீட்-யுஜி 2021 மதிப்பெண்கள் மூலம், 83,075 எம்பிபிஎஸ், 26,949 பி.டி.எஸ், 52,720 ஆயுஷ் மற்றும் 525 பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச், எய்ம்ஸ் 1899 மற்றும் 249 ஜிப்மர் இடங்கள் வழங்கப்படும்.

கூடுதலாக, இந்த ஆண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி லைஃப் சயின்சஸ் சேர்க்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.