மதுரை: ஓய்வுக்காக கொடைக்கானல் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை  விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒருவர், கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த கோரி மனு கொடுக்க வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த மனுவை கொடுக்க வந்தவர் , பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக  தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அதுபோல கடைகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்பட போதை பாக்குகள், போதை மாத்திரைகள் கரளமாக புழக்கத்தில் உள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர், இதை விற்பனை செய்வது அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 5 நாட்கள் ஓய்வு எடுக்கும் வகையில், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது, விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார்.  அவரை மடக்கிய காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்   மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், போலீசார், இது முதல்வரின் தனிப்பட்ட பயணம் என்பதால், மனு வழங்க  அனுமதி கிடையாது என்று கூறினர்.  இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

மனு அளிக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், அவருக்கும் காவல்துறை யினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து,  அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர்.

அந்த மனுவில் , தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து சங்கர்பாண்டியை கைது செய்த போலீசார் அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஜோராக நடைபெறும் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 40 பேர் கைது….