பெங்களூரு:

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை அவரது மகன் ஆட்டுவிப்பதால், நம்பிக்கைக்குரிய தலைவர்களை விட்டு அவர் விலகிச் சென்றுவிட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.


இது குறித்து பாஜகவினர் கூறியதாவது:

காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது மட்டுமே கடந்த 8 மாதங்களாக எடியூரப்பாவின் எண்ணமாக உள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் கவனம் செலுத்துவதைவிட்டு, இது போன்ற ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடும் எடியூரப்பாவின் நடவடிக்கை பாஜக தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்கள் முதல்வராக இருந்துவிட்டு பதவி இழந்ததை அவமானமாக எடியூரப்பா நினைக்கிறார். இதனால் அமைச்சர் பதவி தருகிறேன், பணம் தருகிறேன் என ஆசை காட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கப் பார்க்கிறார்.

இது பல பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது நம்பிக்கைக்குரிய செல்வாக்கு பெற்ற தலைவர்களை எல்லாம் எடியூரப்பா ஓரம் கட்டி வருகிறார். தற்போது தன் மகன் விஜயேந்திரா சொல்கிற படியே நடக்கிறார்.

சிவமொக்கா மக்களவை தொகுதியிலிருந்து எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட விரும்புகிறார். பாலகிருஷ்ணா ஜர்கிகோலியின் உதவியுடன் காங்கிரஸாரை வளைத்துப் போட முயற்சிக்கிறார். ஆட்சியை கவிழ்த்தால் தனக்கு சீட் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறார்.

நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த ஆர்.அசோகா போன்ற மூத்த தலைவர்களை எடியூரப்பா ஓரம் கட்டிவிட்டார். அப்பா, மகன் அரசியல் என மதசார்பற்ற ஜனதா தளத்தை பாஜக குற்றஞ்சாட்டுகிறது. சரியான முடிவு எடுக்காவிட்டால் வாக்காளர்களை நம்மையும் நம்பமாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.