மின்னல் வேக ரயில் என ரயில்வே அமைச்சர் ப்யூஸ் கோயல் வெளியிட்ட போலி வீடியோ: வைரலாகும் பொய்…

Must read

புதுடெல்லி:

பிரதமர் மோடியின் ‘மேக் இந்தியா’ திட்டத்தின் படி, மின்னல் வேகத்தில் பறக்கும் ‘வந்தே பாரத்’ பகுதி அதி விரைவு ரயிலை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக, மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் வெளியிட்ட வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.


பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடந்த 2014 தேர்தலில் பெருமளவு பொய் பிரச்சாரம் செய்தனர். ஆட்சிக்கு வந்தபின்பும் பழைய படங்களை சேர்த்து தற்போது மோடிக்கு கூட்டம் சேர்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது.

தற்போது ஒருபடி மேலே போய், ரயில்வே அமைச்சர் ப்யூஸ் கோயல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ, ஒரு சில  மணி நேரத்திலேயே போலி என நிரூபிக்கப்பட்டு, பல தரப்பிலிருந்தும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ஞாயிறன்று அவர் வெளியிட்ட பதிவில், “இது பறவை..இது விமானம்…மேக் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பகுதி அதி விரைவு ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ மின்னல் வேகத்தில் பறப்பதைப் பாருங்கள்..”என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இதனை மூத்த பாஜக தலைவர் ராம் மாதவ் உடனே பகிர்ந்து, அதிவிரைவு ரயிலை தயாரித்த இந்திய அரசை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோ போலியானது என, அடுத்த சில மணி நேரத்திலேயே கண்டன பதிவுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

வழக்கமான வேகத்தில் செல்லும் ரயிலின் வீடியோவை, (2x Time Faster) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரு மடங்கு வேகமாக செல்வதுபோல் மாற்றியமைத்து போலியாக வெளியிட்டுள்ளதை அம்பலப் படுத்தியுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், மக்களை ஏமாற்றும் இது போன்ற வேலைகளில் பாஜகவினர் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக பல தரப்பிலுருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

பொறுப்பான ஒரு மத்திய அமைச்சரே இவ்வாறு போலியான வீடியோவை வெளியிடலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

More articles

Latest article