டில்லி

ம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கு யஷ்வந்த் சின்ஹா,  சத்ருகன் சின்ஹா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டில்லி சட்டசபையின் 20 ஆம் ஆத்மி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு அளித்தது.   அதை ஏற்றுக் கொண்ட  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.   இதற்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் முன்னாள் அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோரும்  இதற்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.    இருவரும் தங்களின் டிவிட்டர் பதிவில் அரசை கடுமையாக சாடி உள்ளனர்.

யஷ்வந்த் சின்ஹா, ”நீதியை முழுவதுமாக ஜனாதிபதியின் இந்த உத்தரவு கருவறுத்து விட்டது.  உயர்நீதிமன்ற உத்தரவுக்கோ, விசாரணைக்கோ காத்திராமல் துக்ளக்தனமாக போடப்பட்டுள்ள மோசமான உத்தரவு இது”  என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.

சத்ருகன் சின்ஹா, “நீண்டகாலம் பழிவாங்கும் அரசியல் நீடிக்காது.  கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் இருக்கவும்.   விரைவில் கடவுள் உங்களுக்கு நீதி அளிக்க வேண்டுகிறேன்.   வாய்மையே வெல்லும்.  ஜெய்ஹிந்த்”  என ஆம் ஆத்மி கட்சியினருக்கு தனது ஆறுதலை தெரிவித்து டிவிட்டரில் பதிந்துள்ளார்.

இருவரும் தொடர்ந்து மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து பயங்கரமாக விமர்சித்து வருவதால்   அரசியல் நோக்கர்கள் அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என கூர்ந்து கவனித்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.