கொல்கத்தா

ஸ்ரீராம நவமிக்கு மேற்கு வங்கத்தில் விடுமுறை அறிவித்ததற்கு பாஜக கிண்டல் செய்துள்ளது.

 

அடுத்த மாதம் 17 ஆம் தேதி ஸ்ரீராம நவமி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது., மேற்கு வங்காள அரசு ஸ்ரீராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏப்ரல் 17 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் துர்கா பூஜை, காளி பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை முக்கிய பண்டிகைகள் ஆகும். மேலும் கடந்த சில ஆண்டுகளாக ராம நவமி ஊர்வலங்களின் போது மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் மேற்கு வங்க அரசு ஸ்ரீராம நவமியை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா,

‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ என்று ஒவ்வொரு முறையும் உச்சரிக்கும் போது கோபத்தால் நீல நிறமாக மாறும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் ராம நவமியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார். அவர் தனது இந்து விரோதப் பிம்பத்தை மீட்டெடுக்கவே இதைச் செய்துள்ளார்.

என்று கேலி செய்துள்ளார்.

மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி,

“மாநிலத்தில் மாறி வரும் சூழ்நிலை காரணமாக மம்தா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையால் ராமபக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் ஸ்ரீராம நவமியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்,”

என்று தெரிவித்துள்ளார்.