டில்லி
பாஜக மக்கள் தொகை விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரு குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு அரசு அளிக்கும் சலுகைகள், தேர்தலில் போட்டியிடும் உரிமை ஆகியவை கிடைக்காது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே மிகவும் எதிர்ப்பை தூண்டி உள்ளது.. பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இதை எதிர்த்து வருகின்றனர்.
இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான சஷி தரூர், “உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மக்கள் தொகை குறைப்பு குறித்து அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத் தற்செயல் என நிச்சயமாக சொல்ல முடியாது.
அனைத்து விவகாரங்களிலும் பாஜக தனது இந்துத்துவா கூட்டாளிகளுக்கு ஆதரவாக நடந்து வருகிறது. இதன் மூலம் இந்த மக்கள் தொகை விவகாரம் என்பது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக பயன்படுத்தவே கொண்டு வரப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தற்போதைய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்பு கிடையாது. ஆனால் இன்னும் 20 வருடங்களில் அதிகரிக்க உள்ள முதியோரின் பிரச்சினைகளே ஆகும். ஆனால் அவற்றை மனதில் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அதிகம் குழந்தைகள் உள்ளதாக அவர்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது” எனக் கூறி உள்ளார்.