டில்லி

நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் விமர்சித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இது அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதாகப் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர்.  குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் ஒரு செய்தித் தொலைக்காட்சி நிகழ்வில் இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாணிக்கம் தாகுர் அந்த நிகழ்வில், “தேர்தல் விதிகள் திருத்தச் சட்ட முன்வடிவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட விதம் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு மக்களவை உறுப்பினர்களுக்கு இந்த சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டது.  இன்று காலை 12.30 மணிக்கு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை எதிர்த்து ஏற்பட்ட அமளிக்கு பின்னர் மீண்டும் அவை கூடிய நிலையில் பிற்பகல் 2.45 மணிக்குச் சட்ட அமைச்சர் இதனை நிறைவேற்றுவதற்கான மசோதாவைக் கொண்டு வந்தார்.

போதிய நேரம் அளிக்கப்படாமல் மசோதா அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது துரித உணவைப் போல மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளும் பாஜகவுடன் நண்பர்களாக உள்ள ஓய்எஸ்ஆர் அவை உறுப்பினர்கள் உட்படப் பலர் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆயினும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

பாஜகவினர் குஜராத் சட்டமன்றத்தில் எப்படி சட்டங்களை நிறைவேற்றுகிறார்களோ அதேபோல நாடாளுமன்றத்திலும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த முறை ஜனநாயக படுகொலை ஆகும். மசோதா கடும் அமளி ஏற்படும் போதும். மசோதாவை நிறைவேற்றி விட்டு தற்போது, “இது போலி வாக்காளர்களைக் கட்டுப்படுத்தவே” என்று கூறுவது வியப்பாக உள்ளது.” என கூறி உள்ளார்.