சென்னை

இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி உள்ளார்.

வரும் 25 ஆம் தேதி உலகெங்கும் ஏசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி பல இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது   அவ்வகையில் இன்று சென்னையில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ்  விழா நடந்தது.  இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் தனது உரையில்” கிறிஸ்துமஸ் விழா என்பது எனது மனதிற்கு நெருக்கமான விழா ஆகும்.   உலகில் அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அந்த அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.   திமுக அரசு சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் அரசாக என்றும் துணையாக உள்ளது.

நாமெல்லோரும் மொழியால், இனத்தால் தமிழர்கள்.  அதே வேளையில் வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம்.  மக்களுக்கான அனைத்தையும் அரசு மட்டுமே வழங்கிவிட முடியாது. அதற்கு இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை.  தேர்தலின் போது, திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறி உள்ளார்.