சென்னை: பாஜகவால் இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. “அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று முற்பகல் பெங்களூரு புறப்பட்டார்.  அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மாதம் சோதனை நடத்திய நிலையில்,  இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையின் முடிவில் பொன்முடி கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று மாலை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையம் வந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்  என்றார். எந்த சவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது” .  இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை. பாஜகவின் ஏவல்துறையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என கூறிய ஸ்டாலின், பாஜகவால் இந்தியாவுக்கே ஆபத்து,  ஆபத்தில் இருந்து இந்தியாவைக் காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அமலாக்கதுறை ரெய்டுகளை பாஜக நடத்துகிறது.

எங்களுக்காக ஆளுநர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் நடத்தி வருகிறது. பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும். அமலாக்கத்துறை சோதனை திசைதிருப்புவதற்காக நடத்தப்படுகிறது, இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறியவர்,  மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் எனும் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எதிர்க்கட்சி கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து பேசுவிங்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கூறிய முதலமைச்சர், “காவிரி மேகதாது பிரச்சனையைப் பொறுத்தவரையில், என்றைக்குக் கலைஞர் ஒரு முடிவு எடுத்து அந்த பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாரோ அந்த பணியிலிருந்து கிஞ்சித்தும் நழுவாமல் தொடர்ந்து அந்த பணியை கடைப்பிடிப்போம். இந்த கூட்டம் மத்தியில் இருக்கும் பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம்; காவிரி பிரச்சனைக்கான கூட்டம் அல்ல. இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது; அதனை காப்பாற்றத்தான் இந்த கூட்டம்” என்றார்.