டெல்லி: மக்களவையில் எம்.பி.கள் எண்ணிக்கையை 2024 தேர்தலுக்கு முன்பாக 1000 ஆக உயர்த்த பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2019 ல் மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை தற்போதைய 543 இலிருந்து 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2024 க்கு முன்னர் மக்களவையின் வலிமையை 1000 அல்லது அதற்கு மேற்பட்டதாக உயர்த்துவதற்கான திட்டம் உள்ளது என்று பாஜக நண்பர்கள் மூலம் அறிந்தேன். இதனால், நான் நம்பத்தகுந்த முறையில் அறிவிக்கிறேன். புதிய நாடாளுமன்ற அறை 1000 இருக்கைகளாக கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளார். மேலும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்பாக, பொது விவாதம் அவசியம் என்று மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மணிஷ் திவாரியின் டிவிட் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை கூட்டினால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பங்களிப்பு பாராளுமன்றத்தில் பெரிதும் குறைந்துவிடும், இதனால் பாஜகவுக்கு மேலும் சாதகமாகும என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.