கொல்கத்தா: பாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்குவங்கத்தில் எடுபடாது என்று அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

கொல்கத்தாவில் என்ஆர்சி தொடர்பான ஒரு விழாவில் கலந்துகொண்ட அமித்ஷா, என்ஆர்சி தொடர்பாக மம்தா பானர்ஜி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வருவதாகவும், இந்துக்கள் நாட்டைவிட்டு வெளியேற தேவையிருக்காது என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பேசியிருந்தார்.

இந்து, சீக்கிய மற்றும் ஜைன அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பேசிய அமித்ஷா, ஊடுருவல்காரர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் பேசியிருந்தார்

இதற்கு பதிலடியாகப் பேசியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “பாரதீய ஜனதா அரசு பிரித்தாளும் அரசியலை செய்கிறது. மேற்கு வங்கத்தில் மதத்தின் பெயரால் யாரையும் பிரிக்க முடியாது. அமித்ஷாவின் முயற்சி எந்தவகையிலும் எடுபடாது.

என்ஆர்சி தொடர்பாக எந்தவித கடிதத்தையும் மத்திய அரசிடமிருந்து மேற்குவங்க அரசு பெறவில்லை” என்றுள்ளார்.