நேற்று இரவு, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  அவர் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார்.

பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ““மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த 75 நாட்களும் நான் மருத்துவமனை சென்றேன். ஆனால்  அவரைப் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை” என்றார். மேலும், “ஆனாலும்  சந்தேகததுக்கிடமான கேள்வியை எழுப்ப என் மனம் ஒப்பவில்லை” என்றும் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணக்கமான சூழலை வைத்திருந்தீர்கள். ஆகவே பாஜக உங்களை இயக்குகிறது என்று ஒரு கருத்தும். மத்திய பாஜக அரசுதான் உங்களை இயக்குகிறது என்றும் கருத்துக்கள் உலவுகின்றனவே” என்ற கேள்விக்கு, “நான் கட்சிக்கு கட்டுப்பட்டவன். துரோகம் செய்ய மாட்டேன். நான் இப்போதைக்கு தனி ஆள்தான்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

“அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக சசிகலா தரப்பு தெரிவிக்கிறதே” என்ற கேள்விக்கு,  “மனசாட்சி என்று இருந்தால், மனசாட்சிப்படி எம்.எல்.ஏக்கள் நடந்துகொள்ளட்டும். அவர்களை எம்.எல்.ஏ. ஆக்கியது ஜெயலலிதாதான். அவரது கொள்கை கோட்பாடுகளை எம்.எல்.ஏக்கள் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

“கட்சி, ஆட்சி இரண்டுக்கும் ஒரே தலைமை இருப்பதே நல்லது என்பது பற்றி..” என்ற கேள்விக்கு, “எம்.ஜி.ஆர். காலத்தில் பெரும்பாலும் மூத்த தலைவர் யாரேனும் கட்சி தலைமைப் பொறுப்பை வகிப்பார்.  எம்.ஜி.ஆர்., முதல்வராக இருப்பார். ஜெயலலிதா காலத்தில்தான் சூழல் கருதி இரண்டு பொறுப்புகளையும் அவர் வகித்தார். மற்றபடி இரு பொறுப்புகளையும் ஒருவரே வகிக்கவேண்டும் என்ற விதி கட்சியில் இல்லை!”என்றார்.

“சசிகலா குடும்பத்தினர்தான் உங்களை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி உங்கள் உயர்வுக்கு வழிவகுத்தார்கள் என்று சசிகலா தரப்பு சொல்கிறதே?”

“நான் 1977ல் இருந்து இயக்கத்தில் இருக்கிறேன். வார்டு கழக செயலாளரக இருந்த நான், 80களில் நகர எம்.ஜிஆர் அணி செயலாலரானேன்… 1993ல் பெரியகுளம் நகர செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

1996ல் அ.தி.மு.க.வுக்கு மிகச் சோதனையான காலகட்டம். அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட பலரும் விரும்பவில்லை. அந்தத் தேர்தலில் 104 நகராட்சிகளில் 8 ல் மட்டும் அ.தி.மு.க. வென்றது. அப்படி வெற்றி பெற்றவர்களில் நானும் ஒருவன். இதிலிருந்தே நீங்கள் என் அரசியல் வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ளலாம்” என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.