இம்பால்:

மணிப்பூர் மாநில பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக பயிரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இங்கு முழு பெரும்பான்மையுடன் இக்கட்சி வெற்றி பெற்றிருப்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ், பாஜ இடையே இழுபறி நிலை நீடித்தது.

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பாஜ 21, நாகா மக்கள் முன்னணி 4, லோக் ஜன் சக்தி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் தலா 1, தேசிய மக்கள் கட்சி 4, சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் இங்கு ஆட்சி அமைக்க பாஜ உரிமை கோரியுள்ளது. பாஜ சட்டமன்ற குழு தலைவராக பயிரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தான் மணிப்பூர் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். இதர கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவை பாஜ பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே பாஜ ஆட்சி அமைக்க கவர்னர் நெஜ்மா ஹெபதுல்லாவை சந்தித்து உரிமை கோரியுள்ளது. பயிரன் சிங் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். முன்னாள் கால்பந்து வீரரான இவர் பத்திரிக்கையாளராகவும் இருந்தவர். மணிப்பூர் முதல்வராக இருக்கும் இபோபி சிங்க்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜ சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.