சென்னை: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கோழிகள், வாத்துகள் செத்து விழுந்தன. பின்னர் நடத்தப்பட்டு ஆய்வுகளில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருக்க தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, தீவனங்கள் ஆகிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கேரள எல்லையில் உள்ள தமிழகத்தின் 6 மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை,திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சோதனை சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் இயக்குநர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: மாவட்ட அளவிலான அதிகாரிகள், முட்டை ஒருங்கிணைப்புக் குழு, பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும்  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பறவைகளை தாக்கும் இந்த இன்ஃப்ளூயன்ஸா மனிதர்களுக்கு பரவுகிறது என்றார்.

பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் டாக்டர் சி.எஸ்.செல்வகுமார் கூறி இருப்பதாவது: அரசின் வழிமுறைகளை பின்பற்றி, பார்வையாளர்களின் நுழைவை நாங்கள் தடை செய்துள்ளோம்.  பறவைகளுக்கு தீவனம் தயாரிக்க போதுமான தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் இருப்பில் உள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் உதவி பொது மேலாளர் வி.எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த பிரச்சினை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அது பரவாமல் தடுக்க அதிகபட்ச முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பறவை காய்ச்சலை தொடர்ந்து, கோவை மற்றும் பிற இடங்களில் உள்ள தமிழக, கேரள எல்லையில் கால்நடை பராமரிப்பு துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இது குறித்து பேசிய மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஆர்.பெருமாள்சாமி, கோயம்புத்தூரில் உள்ள வனத்துறையிடம் புலம்பெயர்ந்த பறவைகளின் நீர்நிலைளை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்று  தெரிவித்தார்.