சாலையில் பைக்கில் பின்னல் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர் கயிற்றால் நாயைக் கட்டி நடுரோட்டில் நடக்க வைத்து இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்கு நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான விடியோவை அந்த வழியே காரில் சென்ற ஒருவர் படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

நடுரோட்டில் ஒரு வாயில்லா ஜீவனை இதுபோல் வதைப்பதைக் கண்ட அவ்வழியே வந்த வேறொருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் முன்னாள் ஏற்றும் படி அறிவுறுத்த, அந்த செல்ல பிராணியும் ஏதும் முரண்டு பிடிக்காமல் விட்டால் போதும் என்று அந்த வண்டியில் ஏறி மீதி பயணத்தை தொடர்ந்தது.

தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை எவ்வளவு விலையுயர்ந்த காராக இருந்தாலும் அதில் ஏற்றிச் செல்லும் உரிமையாளர்கள் இருக்கும்போது இதுபோன்று வதை செய்ததை கண்டு பலரும் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CZmCQREFS6I/

இந்த விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர் இது தற்செயலாக தான் அந்த வழியே செல்லும் போது கண்ட காட்சி என்றும் ஒரு ஆதாரத்திற்காக படம் பிடிக்க நினைத்த போது வேறு ஒருவர் வந்து தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறி பதிவிட்டிருக்கிறார்.