சென்னை:

பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும்  சாலை விதிகளை மீறியதாக 242 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இளைஞர்கள் அவ்வப்போது பைக் ரேஸ் நடத்துவதும், இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் மரணிப்பதும் தொடர்கதையாகிறது. இதை தடுக்க காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிப்பதில்லை. இதுபோன்ற பைக் ரேஸில் பண்கக்கார வீட்டு பையன்களும், உயர் அதிகாரிகளின் பையன்களும் கலந்துகொள்வதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக் ரேஸில் ஈடுபட்ட ஒரு இளைஞர் விபத்தில் சிக்க, அவருக்கு பின்னார் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு மரணமடைந்தார். இது பெரும் சர்ச்சை யானது.

இந்த நிலையில்,   பைக் ரேஸை தடுக்க ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீஸ் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர. குறிப்பாக காமராஜர் சாலையில் 29 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று  சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை கைது காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்,  சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக நேற்று ஒரே நாளில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது.