பாட்னா

மீபத்தில் ராமநவமி அன்று ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மசூதிகள் புனரமைப்பு பணிகளுக்கு பீகார் அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

கடந்த ராமநவமி அன்று பீகார் மாநிலத்தில் கடும் மதக் கலவரம் வெடித்தது.    இதில் ஔரங்காபாத், நவாடா, சமஸ்திப்பூர், உட்பட பல இடங்களில் மசூதிகள் சேதத்துக்கு உள்ளாகினா.    இது போல எட்டு மாவட்டங்களில் உள்ள பல மசூதிகள் சேதப்படுத்தப் பட்டதாக தகவல்கள் வெளியாகின.   இவ்வாறு சேதப்படுத்தப் பட்ட கட்டிடங்களை புனரமைக்க அரசு நிதி தேவை என கோரிக்கை விடப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்ற பீகார் அரசு ரூ.35 லட்சம் நிதி உதவியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.    இதில் ரூ.25.3 லட்சம் ஔரங்காபாத் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.   இங்கு மசூதிகள் மட்டும் இன்றி பல கடைகளும் தீ வைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.  நவதா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு ரூ.8.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.   இதே போல மீதமுள்ள தொகை சமஸ்திப்பூர் உட்பட பிற பகுதிகளுக்கு பிரித்து அளிக்கப்பட உள்ளது.

இந்தத் தொகை வேறு எந்த ஒரு பணிக்கும் பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.   ”அரசு அதிகாரிகள் ஒவ்வொரு இடத்துக்கும் தேவையான தொகை குறித்து மாவட்ட நீதிபதிக்கு பரிந்துரைப்பார்.   அந்த பரிந்துரைக்கேற்ப நீதிபதி தொகைகளை ஒதுக்கீடு செய்வார்.     ஒதுக்கிடு செய்யும் முன் அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்படும்.    சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை சேர்க்கப்படும்.” எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

பீகார் மாநில பாஜக தலைவர்கள் அரசு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உதவி புரிவதாக குற்றம் சாட்டி இருந்தது.    இதற்கு முதல்வர்  நிதீஷ்குமார், “பிரிவினை வாத சக்திகளுக்கு இந்த அரசு உதவி புரியாது.   எங்கள் அரசு அமைதியை நிலை நாட்டவும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி புரிய மட்டுமே அமைக்கப்பட்டுளது.   அரசு குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.