பாட்னா:

பீகாரில் தொடர் மழையினால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 41 பேர் பலியாகியுள்ளனர்.

அசாம், பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மீட்பு பணிகள் செயல்பட்டு வருகிறது.

பீகாரில் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்க ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதல்வர் நிதிஷ் குமார், மீட்புப்பணிக்கு மேலும் ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் இது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் 65.37 லட்சம் மக்கள் பாதித்துள்ளனர்.